எஸ். சசிதரன் தி இந்து நவம்பர் 20, 2013
உலகில் வேறெங்கும் இல்லாத வகையில், பல லட்சம் பேரின் வீட்டு உணவுகளை சுமந்து சென்று அவர்கள் பணிபுரியும் அலுவலகங்களுக்கே சப்ளை செய்யும் மும்பை மாநகர டப்பாவாலாக்களை பற்றி உலகமே அறியும். அந்த டப்பா வாலாக்களின் பணியை சென்னை நகரில் ஒரு குடும்பத்தினர் 3 தலைமுறைகளாக சத்தமின்றி செய்து வருகின்றனர்.
சென்னை அண்ணா நகரில் தொடங்கி பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் மதிய உணவு பார்சலை நகரின் வெவ்வேறு மூலைகளில் உள்ள அலுவலகங்களுக்குக் கொண்டு சேர்க்கின்றனர் அண்ணா நகரைச் சேர்ந்த மல்லிகா மற்றும் குடும்பத்தினர்.
மும்பையைப்போல சப்ளை செய்யப்படும் டப்பாக்களின் எண்ணிக்கை அதிகம் இல்லாவிட்டா லும், ஒரு நாளைக்கு சுமார் 500 பேருக்கான உணவை சுமந்து செல்கின்றனர். வெயில், மழை என எந்த இடர்பாடு இருந்தாலும் இவர்களின் பணி நிற்காது.
வெற்றிகரமாக மூன்றாவது தலைமுறையாக இந்த தொழிலை நடத்தி வருவது பற்றி மல்லிகாவும் அவரது குடும்பத்தினரும், ‘தி இந்து’ நிருபரிடம் கூறியது:
இந்த தொழிலை எங்கள் பாட்டி மாணிக்கம்மாள் 45 ஆண்டுக்கு முன்பு தொடங்கினார். பெரம்பூர் சிம்சன் ஆலையில் வேலை செய்தவர்களுக்கு அவர்களது வீடுகளில் இருந்து மதிய உணவினை பெற்று மாதம் காலணா, அரையணா கூலியில் சப்ளை செய்து வந்தார். பின்னர், எங்கள் பெற்றோர் கே.கணேசன், ராணி தொழிலை சற்று விரிவாக்கி, பின்னி மில் தொழிலாளர்களுக்கு பஸ் மூலம் மாதம் ரூ.3 கூலிக்கு உணவு கொண்டு சென்றனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் தலையெடுத்த பிறகு தொழிலை இன்னும் விரிவாக்கி 500 பேருக்கு தினசரி உணவு கொடுத்து வருகிறோம். அண்ணா நகர் தொடங்கி வேப்பேரி, கொசப்பேட்டை வரை வீடுகளில் மதிய உணவைப் பெற்றுக் கொண்டு வேப்பேரி சம்பத் சாலையில் வைத்து டப்பாக்களை பிரித்து வெவ்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்கிறோம். இந்த பணியில் ஈடுபட்டுள்ள 15 பேர் கொண்ட குழுவில், 12 பேர் எங்களது குடும்பத்தினர்.
புரசைவாக்கம், வேப்பேரி, அண்ணாசாலை, பாரிமுனை, பிராட்வே, சவுகார்பேட்டை, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை என பல பகுதிகளுக்கு உணவு கொண்டு சென்று தருகிறோம். மாதக் கட்டணமாக ரூ.300 பெறுகிறோம். சாப்பிட்ட டப்பாவை மீண்டும் வீட்டில் கொடுப்பதாக இருந்தால் ரூ.400. ஞாயிறு ஒரு நாள் மட்டும் விடுமுறை. இவ்வாறு மல்லிகா குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Keywords: டப்பாவாலாக்கள், மதிய உணவு, சென்னை