Saturday, October 15, 2011

நார்ச்சத்துள்ள உணவு உண்டால் உடல் எடை குறையும்





 ஒன்இந்தியா :சனிக்கிழமை, அக்டோபர் 15, 2011, 9:48 


எதை உண்பது என்று அறியாமல் பசிக்கும் போதெல்லாம் கிடைத்ததை சாப்பிடுவதனால் உடல் எடை கூடி அவதிப்படுபவர் பலர். தேவையற்ற உணவுகளை உண்பதால் உடலில் உள்ள ஜீரணமண்டலம்தான் அதிகம் சிரமப்படுகிறது. உணவை அரைத்து சத்தாக மாற்ற முடியாமல் போவதால் செரிமானக்கோளறுகள் ஏற்படுவதோடு பல வித நோய்களால் உணவுக்குழல் பாதிக்கப்படுகிறது. இதில் இருந்து பாதுகாக்க நார்ச்சத்துள்ள உணவை அதிகம் உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

நார்ச்சத்து நன்மைகள்

நாம் உண்ணும் உணவு எளிதில் செரிமானமாக முக்கிய பங்காற்றுவது நார்ச்சத்து. நார்ச்சத்து இரண்டு வகைப்படும். நீரில் கரையும் நார்ச்சத்து, கரையாத நார்ச்சத்து. கரையும் நார்ச்சத்து பெரும்பாலும் கரைந்தவுடன் ஜெல்போல ஆகிவிடும். இது பெக்டின் உள்ளவை. ஓட்ஸ் உமி, ஓட்ஸ், பீன்ஸ், வேர்க்கடலை, அரிசி, உமி, பார்லி, சாத்துக்குடி – ஆரஞ்சு போன்ற ‘சிட்ரஸ்’ பழங்கள், ஆப்பிள், கோதுமை, பருப்பு இவை கரையும் நார்ச்சத்து கொண்டவை. இது நாம் உண்ணும் உணவில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும்.

கரையாத நார்ச்சத்து

கரையாத நார்ச்சத்து என்று கூறப்படும் செல்லுலோஸ், ஹெமி செல்லுலோஸ், லிக்னின் உள்ளவை. இவை பழங்கள், காய்கறிகள் தானியங்களிலும், காணப்படுகின்றன. ஆப்பிள்தோல், முட்டைக்கோஸ், பீட்ரூட், காலிஃப்ளவர், கேரட், போன்றவற்றில் கரையாத நார்ச்சத்துக்கள். காணப்படுகின்றன. இவை ஜீரணத்திற்குப் உதவும், மலச்சிக்கலைப் போக்கும்.

நார்ச்சத்தின் பயன்கள்

1960 –ல், டென்னிஸ் பர்கிட் என்ற ஆங்கிலேயர் கிராமங்களில் வசிக்கும் ஆப்ரிக்க மக்களுக்கு ஒருவகைக் குடல் புற்றுநோய் தாக்குவதை கண்டறிந்தார். ஆனால் ஐரோப்பியர்களை இந்த நோய் அபூர்வமாக தாக்குகிறது என்றும் இதற்கு காரணம் அவர்கள் உண்ணும் நார்ச்சத்து உள்ள உணவுதான் என்றும் கண்டுபிடித்தார். ஐரோப்பியர்கள் அதிக நார்ச்சத்து உள்ள உணவை உட்கொள்கின்றனர் என்று டென்னிஸ் நிரூபித்தார். உணவில் நார்ச்சத்து சேர்ந்து கொள்வதால் நுரையீரல், பிராஸ்டேட், கணைய புற்று நோய்கள் தடுக்கப்படுகின்றன. அதுவும் சைவ உணவு உண்பவர்களுக்கு நார்ச்சத்து அதிகம் கிடைக்கிறது. இதன் பிறகே நார்ச்சத்து பற்றிய ஆய்வுகள் நார்ச்சத்தின் மேன்மையை பறைசாற்றின.

புற்றுநோயை தடுக்கும்

கரையாத நார்ச்சத்து நீரை உறிஞ்சி மலத்திற்கு அடர்த்தியையும், திடத்தன்மையையும் கொடுக்கிறது. இதனால் மலம் மிருதுவாகிறது. இதனால் மலம் எளிதில் வெளியேறுவதால் மலச்சிக்கல் மறைகிறது. இதனால் குடல் அழற்சிகள் தடுக்கப்படுகின்றன. இதன் மூலம் குடல்களில் உண்டாகும் புற்றுநோய்கள் தடுக்கப்படுகின்றன. கரையாத நார்ச்சத்தினால் வயிறு நிரம்பிய உணர்வு உண்டாகிறது. 4 முதல் 6 மணி நேரம் வரை பசி எடுப்பதில்லை. இந்த செயல்பாடுகளால் பசியைத்தூண்டும் இன்சுலினை கட்டுப்படுத்துகிறது. இது உடல் எடையை அதிகமாக்காமல் பாதுகாப்பதால் குண்டானவர்களுக்கு எடை குறைய உதவுகிறது.

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்

கரையும் நார்ச்சத்து பித்த உப்பு, கொழுப்பு அமிலங்களை ஸ்பாஞ்ச் போல உறிஞ்சி மலமாக வெளியேற்றுகிறது. கொழுப்பு மற்றும் கொழுப்பு அமிலங்களை குறைக்கிறது. இதனால் இதயம் பாதுகாக்கப்படுகிறது. சர்க்கரை செரிமானத்தை மந்தப்படுத்துவதால் நீரிழிவு நோயாளிகளின் இன்சுலின் மற்றும் ரத்த சர்க்கரை அளவுகளை குறைக்கிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உண்டு உடல் எடையை கூட்டுவதை விட எளிதில் ஜீரணமாகும் காய்கறி உணவுகளை உண்டு ஸ்லிம்மாக உடலை மெயின்டெய்ன் பண்ணுங்க.
   

No comments:

Post a Comment