சாப்பிட வாங்க! :ஆதி வெங்கட்.
சாம்பார் செய்ய புளி ஊறவைக்க புளி டப்பாவை திறந்து பார்த்தா, சுத்தமா புளியே இல்லையா? சாம்பார்தான் கடையிலேயே விக்குதே வாங்கிக்கலாமேன்னு சொல்லவா இந்த பதிவு? சரி புளியில்லாம சாம்பார் எப்படி வைக்கிறதுன்னு பார்க்கலாமா? திடீர் விருந்தாளிகள் வந்தாலும் இந்த சாம்பாரை நீங்க சுலபமா செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் : 2
தக்காளி : 3
துருவிய தேங்காய் : 2 தேக்கரண்டி
கடுகு, வெந்தயம் : சிறிதளவு.
தனியா : 2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு : 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் : 2 [அ] 3
பெருங்காயம் : சிறிதளவு.
உப்பு, மஞ்சள் பொடி : தேவைக்கேற்ப
துவரம்பருப்பு : ஒரு கப்.
எண்ணெய் : தேவைக்கேற்ப
கருவேப்பிலை : சிறிதளவு
கொத்தமல்லி : சிறிதளவு
செய்முறை
துவரம்பருப்பை குக்கரில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில், சிறிதளவு எண்ணைய் விட்டு தனியா, கடலை பருப்பு, சிகப்பு மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை பொன்னிறத்தில் வறுத்துக்கொள்ளுங்கள். ஆறிய பிறகு அதனுடன் தேங்காய் சேர்த்து கொறகொறவென அரைத்து வைத்துக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்துக் கொள்ளவும். பிறகு நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி, கருவேப்பிலையைச் சேர்த்து வதக்கி பிறகு தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்கவிடவும். சிறிது கொதி வந்தவுடன் அரைத்து வைத்த விழுதினைப் போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு வேகவைத்த துவரம்பருப்பினை போட்டு நன்றாக கொதி வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தழைகளை மேலே தூவி விடுங்கள். இப்போ புளியில்லா சாம்பார் ரெடி! பரவாயில்லையே புளியே இல்லாமல் சாம்பார் செஞ்சுட்டியே! சரியான "சமையல் புலி" தான் நீ என்ற பட்டத்தையும் வாங்கிக்கோங்க!
No comments:
Post a Comment