போல்ட் ஸ்கை: திங்கள்கிழமை, ஜூன் 11, 2012, 17:08
கோடைகாலத்தில் உடல் உஷ்ணம் ஏற்படுவது இயல்பு. உடல் உஷ்ணத்தினால் நீர்க்கடுப்பு, பித்தம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இதுபோன்ற காலங்களில் தாழம்பு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. வாசம் வீசும் தாழம்பூக்களின் மருத்துவ குணங்களை பட்டியலிட்டுள்ளனர் சித்த மருத்துவர்கள்.
தாழம்பூ மணப்பாகினை ஒரு தேக்கரண்டி அளவு நீரில் கலந்து இருவேளை குடித்து வர உடல் உஷ்ணத்தைத் தணிக்கும். தாழம்பூவை நீரில் ஊற வைத்து அந்நீரை குடித்து வர வியர்வையை உண்டாக்கும்.
தாழம் பூ செடியின் வேரை இடித்து சாறு பிழிந்து அதனுடன் வெல்லம் கலந்து உட்கொண்டு வர வெப்ப நோய்கள் தணியும். தாழம் இலையின் விழுதை இடித்து சாறு பிழிந்து நெய்யுடன் கலந்து காய்ச்சி 5 மில்லி அளவு உட்கொண்டு வர நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு குணமாகும்.
தாழம்பூவை துண்டு துண்டாக வெட்டி நீரில் இட்டு காய்ச்ச வேண்டும். நீர் நன்கு கொதித்து பூவிதழ்கள் வதங்கிய பின் வடிகட்டி, தேவையான சர்க்கரை கூட்டி பாகுபதமாய் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். இதுவே தாழம்பு மணப்பாகு. இதனை ஒரு தேக்கரண்டி அளவு நீரில் கலந்து இருவேளை குடித்து வர உடல் உஷ்ணத்தைத் தணிக்கும். இப்படி செய்தால் பித்த நோய்களும் தீரும். அதிகளவில் சிறுநீர் வெளியாவதைத் தடுக்கும். தாழம்பூ மணப்பாகினை வெயில் காலங்களில் தினசரி உபயோகித்து வர அம்மை நோய் வராமல் தடுக்கலாம்.
தாழம்பூ தோல்நோய்களை குணமாக்கும். மணப்பாகை தாழம்பூ வேரினைப் பயன்படுத்தி செய்து வைத்துக் கொண்டு உட்கொண்டு வர சொறி, சிரங்கு, தினவு, தோல் நோய்கள் குணமாகும்.
தாழம்பூவை நெருப்புத் தணலில் காட்டி கசக்கி சாறு பிழிந்து அதில் சில துளிகளை காதில் விட்டால் காது வலி, காதில் தோன்றும் கட்டி ஆகியவை குணமாகும். தாழம்பூ சாம்பலை காயங்களின் மீது பூச புண்கள் குணமாகும்.
No comments:
Post a Comment