ஒரு வருடத்திற்கு பல்வேறு காலநிலை மாற்றங்களை சந்திக்கிறோம். அப்படி வரும் ஒவ்வொரு பருவக்காலத்தின் போதும், ஒவ்வொரு பழங்கள் விலை மலிவாக கிடைக்கும். அந்த வகையில் இப்போது குளிர்காலம் ஆரம்பித்து விட்ட நிலையில், இந்த பருவ காலத்தில் நன்கு விளையக்கூடிய பழங்கள் மார்கெட்டுகளில் வந்து குவியும். மேலும் இக்காலத்தில் ஒரு ஸ்பெஷல் என்னவென்றால், அனைவருக்கும் பிடித்த ஆப்பிள் பழமானது மிகவும் விலை மலிவாக கிடைக்கும். அதுமட்டுமின்றி, இது போன்ற இன்னும் நிறைய பழங்கள் இக்காலத்தில் விலை குறைவில் கிடைக்கும்.
ஆகவே எப்போதும் சீசன் பழங்களை தவறாமல் வாங்கி சாப்பிட்டு விட வேண்டும். இதனால், அந்த பழங்களில் உள்ள சத்துக்களை எளிதில் பெற முடியும். மேலும் குளிர்காலத்தில் விளையக்கூடிய பழங்கள் அனைத்தும், இக்காலத்தில் ஏற்படக்கூடிய உடல்நல பிரச்சனைகளை சரிசெய்யும் தன்மைக் கொண்டவை.
எனவே இந்த குளிர்காலத்தில் விளையக்கூடிய பழங்களை சாப்பிட்டு, சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றில் இருந்து விலகி இருங்கள். சரி, இப்போது குளிர்காலத்தில் விலை மலிவாக கிடைக்கக்கூடிய பழங்களைப் பார்ப்போமா!!!
ஆப்பிள்
சாதாரண காலத்தில் விலை அதிகம் இருக்கும் ஆப்பிள், குளிர்காலத்தில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும். ஆகவே ஆப்பிள் பிரியர்களே! மறக்காமல் இந்த ஆப்பிள் பழத்தை தினமும் சாப்பிட்டு, உடலில் உள்ள சத்துக்களின் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் இதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட காய்ச்சல் மற்றும் சளியில் இருந்து தள்ளி இருக்க முடியும்.
ஆரஞ்சு
ஆரஞ்சு மற்றும் இதர சிட்ரஸ் பழங்கள் கூட குளிர்காலத்தில் அதிகம் விளையக்கூடிய பழங்கள் தான். எனவே இதனை தினமும் சாலட், ஜூஸ் என்று போட்டு உட்கொண்டு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய் தொற்றுகளில் இருந்து விலகி இருங்கள். அதுமட்டுமின்றி, தினமும் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தால், சருமம் பொலிவோடு இருக்கும்.
மாதுளை
ஆப்பிளுக்கு அடுத்த படியாக மிகவும் விலை அதிகமான பழம் என்றால் அது மாதுளை தான். ஆனால் இந்த மாதுளையானது குளிர்கால பழமாவதால், இதனை வாங்கி சாப்பிட்டு, இதனை நன்மைகளைப் பெறுங்கள். குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்போர், இந்த பழத்தை சாப்பிடுவது மிகவும் சிறந்தது. ஏனெனில் இது கலோரி குறைவான பழம்.
குருதிநெல்லி (Cranberry)
குருதிநெல்லி ஒரு பன்முகப் பழம். ஏனெனில் இதனை ஜாம், ஜூஸ், சாஸ், உலர்ந்த நிலையில் என்று பலவாறு சாப்பிடலாம். மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிகம் இருப்பதோடு, இது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.
கொய்யாப்பழம்
ஆப்பிள் பிடிக்காதவர்கள் கொய்யாப்பழத்தை சாப்பிடுங்கள். ஏனெனில் கொய்யாப்பழமானது ஆப்பிளுக்கு இணையான பழம் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. எனவே இத்தகைய பழத்தை தவறாமல் சாப்பிட்டு, உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்ட்ராபெர்ரி
தற்போது ஸ்ட்ராபெர்ரியைக் கூட பல கடைகளில் அதிகம் பார்த்திருப்போம். இது ஒரு கோடைக்கால பழமாக இருந்தாலும், குளிர்காலத்திலும் கிடைக்கக்கூடிய பழம். எனவே இதனை வாங்கி சாப்பிட்டு, உடல் நலத்தையும், அழகையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.
கிவி
குளிர்காலங்களில் அதிகம் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்று தான் கிவி பழம். இதில் கூட எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த பழம் சற்று இனிப்பும், புளிப்பும் கலந்து சூப்பராக இருக்கும்.
நன்றி:http://tamil.boldsky.com/
No comments:
Post a Comment