போல்ட் ஸ்கை திங்கள்கிழமை, மார்ச் 26, 2012, 10:05 [IST]
உயிரியல் ரசாயனமாற்றம் நடைபெறுவதில் பங்கு வகிப்பது வைட்டமின் -சி ஆகும். வைட்டமின் சி ஆனது சிட்ரஸ் அமிலம் அடங்கிய அனைத்து பழங்களிலும் உள்ளது. தக்காளி, மிளகு, முட்டைகோஸ், கொய்யா, காலிஃபிளவர் போன்றவற்றில் இருக்கிறது. மனிதன் தனக்கு வேண்டிய தேவையான வைட்டமின் சி யை அவன் உணவின் மூலம்தான் பெறமுடியும். மனித பரிணாம வளர்ச்சிக்கு அஸ்கார்பிக் அமிலம் ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது. எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவற்றில் வைட்டமின் சி, அஸ்கார்பிக் அமிலம் அதிகம் உள்ளது.
அஸ்கார்பிக் அமிலம்
அஸ்கார்பிக் அமிலம் என்னும் வைட்டமின் சி நீரில் கரையக்கூடிய, ஒளி ஊடுருவக்கூடிய வெள்ளை நிறப் பொடியாகும். நமது உடலில் போதுமான அளவில் வைட்டமின் சி சத்து இல்லாவிட்டால் சொறி, கரப்பான், பல்லில் ரத்தம் வடிதல் மற்றும் ஸ்கர்வி போன்ற நோய்கள் உண்டாகும். நம் உடலுக்கு அஸ்கார்பிக் அமிலத்தினால் பல நன்மைகள் உண்டு. குறிப்பாக நமது உடலில் உள்ள உயிரணுக்களை ஒன்று சேர்த்து பிணைப்பதாகும். இதனால் புதிய செல்களை உற்பத்தி செய்யவும், அழிந்த செல்களை மாற்றவும் வைட்டமின் சி துணை புரிவதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகளுக்கு 35 மி.கிராமும், பெரியவர்களுக்கு 50 மி.கிராமும், பாலூட்டும் தாய்க்கு 80 மி.கிராம் வைட்டமின் சியும் தினம் தேவையாகும். வைட்டமின் சி பற்றாக்குறையால் முடியில் நிறமாற்றம், முடிஉதிர்தல், தோலில் ரத்த கசிவு, கறுப்பு புள்ளிகள் தோன்றும். இதற்கு வைட்டமின் சி அதிக முள்ள உணவுகளை கொடுத்தால் எளிதில் குணப்படுத்தலாம்.
வைட்டமின் சி இருக்கும் உணவுகளை நாம் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் உண்டாகிறது. குறிப்பாக இது உணவிலுள்ள இரும்பு சத்தை ஜீரணிக்க உதவுகிறது. மேலும் வைட்டமின் சி குறைவதால் ஜலதோஷமும் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூளைப் புற்றுநோய்
மூளைப் புற்றுநோய் கட்டிகளை உடைப்பதில் வைட்டமின் சி பெரும் பங்கு வகிக்கிறது என்று அமெரிக்காவின் ஒடேகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக அதிக அளவில் வைட்டமின் சி கொடுக்கப்பட்டால் நோயாளியின் புற்றுக்கட்டிகள் உடையத் தொடங்குகின்றன என்றும் அப்போது ரேடியேஷன் தெரபி எனப்படும் கதிர்வீச்சு சிகிச்சை முறையைக் கையாண்டால் அதிக பலன் ஏற்படுகிறது என்றும் ஆய்வு மேற்கொண்ட டாக்டர் பட்ரீஸ் ஹெர்ஸ்ட் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வில் மேலும் சில படிகளைக் கடந்த பிறகு புற்றுநோய் சிகிச்சைக்குப் பலன் கிடைப்பது அதிகமாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment