Thursday, October 10, 2013

சுவையின் கதை: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா











 தி இந்து | :ஜெய் :வியாழன், அக்டோபர் 10, 2013

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உலகப் பிரசித்தம். இது பாலும் சர்க்கரையும் சேர்த்து தயாரிக்கப்படும் ஓர் இனிப்புப் பலகாரம். தமிழகம், பிற மாநிலங்கள் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் இது விரும்பி உண்ணப்படுகிறது. இதன் வரலாறு பல நூற்றாண்டுப் பின்புலம் உடையது. 

ஆனால் 1970களில் இருந்துதான் இங்கே பால்கோவா தயாரிக்கப்பட்டு உலகப் புகழை அடைந்தது. பால் மற்றும் அது சார்ந்த உணவுப் பொருட்களைத் தொடக்க காலத்திலே நாம் பயன்படுத்தி இருக்கிறோம். புராணக் கதைகளும் இலக்கியமும் இதற்குச் சான்றாக இருக்கின்றன. ஆனால் குறிப்பாக பால்கோவா பற்றிய குறிப்புகள் எங்கும் தென்படவில்லை. 

இங்குள்ள ஆண்டாள் கோயிலில் இன்றும் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டுச் சடங்கின் அடிப்படையில் பால்கோவாவின் வரலாற்றை உத்தேசமாக அறிய முடிகிறது. அதாவது ஆண்டாள் திருமணம் ஆன பிறகு, பிறந்த வீட்டுக்குச் செல்லும் ஒரு சடங்கின்போது சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட திரட்டுப்பாலை ஆண்டாளுக்குப் படைக்கிறார்கள். 

பால்கோவா தயாரிக்கும் முறையுடன் ஓரளவு ஒத்துப்போவதால் இந்த வழிபாட்டு மரபில் இருந்து பால்கோவாவின் வரலாறு பல நூற்றாண்டுப் பழமையானது எனலாம். இந்தப் பின்புலமும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால் வளமும் பால்கோவோ தோன்றலுக்கான காரணமாக இருந்திருக்கலாம்.

20ஆம் நூற்றாண்டில்தான் பால்கோவா ஒரு முக்கியத் தொழிலாகவும் பொருளாதார மூலமாகவும் ஆனது. 1970களில் நாட்டின் பால் உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டு மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட வெள்ளைப் புரட்சியே (White revolution) இதற்கு முக்கியக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இந்தப் புரட்சிக்குப் பிறகுதான் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா தயாரிப்பு, கூட்டுறவு பால்பண்னையாலும் சிறு தொழில் முனைவோராலும் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டது.

 இன்று இந்தத் தயாரிப்பு நூற்றுக்கணக்கான கடைகளுக்கு விரிவடைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு கடையில் மட்டும் சுமார் 600இல் இருந்து 1000 கிலோ வரை பால்கோவா விற்பனையாகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் பாலுக்கு உள்ள தனிச் சுவையே இதற்குக் காரணம் எனச் சொன்னாலும் இங்குள்ளவர்கள் பால்கோவா தயாரிப்பில் எடுத்துக்கொள்ளும் சிரத்தையும் ஒரு பிரதான அம்சம். எவ்வளவோ அறிவியல் மாற்றங்கள் வந்துவிட்ட இந்தக் காலத்திலும் பெரும்பாலானோர் முந்திரிக் கொட்டை ஓடுகளைத்தாம் அடுப்பு எரிக்கப் பயன்படுத்துகின்றனர். 

இந்த முந்திரிக்கொட்டைகள் வெகு நேரம் நின்று எரியக்கூடியது. அதனால் கிடைக்கும் சீரான வெப்பம் பால்கோவா தயாரிப்பின் சுவையைக் கூட்டுகிறது. கடின உழைப்புதான் ஆதாரம் என்றாலும் அவர்கள் அதை ஒரு கலையின் வெளிப்பாடாகவே பார்க்கிறார்கள். இந்த உழைப்பாளிகளின் கடின உழைப்புதான் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு உலக அரங்கில் தனி அடையாளத்தைப் பெற்றுத்தந்திருக்கிறது.

No comments:

Post a Comment