Monday, October 14, 2013

ஆண்களுக்கான சமையல் குறிப்பு


எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் :தி இந்து :திங்கள், அக்டோபர் 14, 2013


மனம் விரும்பி, இது என் வேலை என மனம் ஒப்பிச் சமைக்க வரும் ஆண்கள் அன்றாடம் சந்திக்கும் ஒரு பிரச்னை/கேள்வி இன்றைக்கு என்ன குழம்பு வைப்பது, என்ன காய் சமைப்பது என்பதுதான். 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் பெண்கள் சந்தித்துவரும் கேள்விதான் இது. நூற்றுக்கணக்கான குழம்புகள் அறிந்த பாட்டிமார்கள் இப்போது நம்மோடு இல்லை. இங்குதான் சமையல் குறிப்புப் புத்தகங்கள் நமக்குக் கை கொடுக்கும்.

என் சமையல் அனுபவத்தில் நான் சொல்ல விரும்புவது என்னவெனில் நாமே செய்து பார்த்து புதிய குழம்பு வகைகளை உருவாக்கி இச்சமூகத்துக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும்.

 ஆண்கள் அறிந்துகொள்ள வேண்டியது எல்லாக் குழம்புகளுக்குமான சில அடிப்படைகளைத்தான். உப்பு+புளிப்பு+உரைப்பு -இந்த மூன்றுதான் எல்லா வகைக் குழம்புக்கும் அடிப்படை. இவை மூன்றும்போக ஒவ்வொரு வகைக் குழம்புக்கும் என சில பலசரக்கு வகைகள் மட்டும் சேர்க்க வேண்டும். அவ்வளவுதான்.

சாம்பாரை விட்டால் சைவத்தில் அடுத்த இடத்தில் நிற்பது புளிக்குழம்புதான்.ஓட்டல்களில் வைக்கும் வத்தக்குழம்பு என்பது வேறு.

முதலில் ஒரு கிண்ணத்தில் சிறிய எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்துக்கொள்ள வேண்டும். கத்தரிக்காய் நாலு,முருங்கைக்காய் ஒன்று,தக்காளி இரண்டு இவற்றைக் கழுவி நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். நறுக்கிய பிறகு கழுவாமல், கழுவிய பிறகு நறுக்குவதுதான் சரி. காய்களில் உள்ள நீர்ச்சத்து வீணாகாமல் இருக்கும்.

புளிக்குழம்புக்கான மசாலாவுக்கு முதலில் மல்லி விதை, சீரகம், சிறிது கடலைப்பருப்பு, ஆறு அல்லது ஏழு மிளகாய் வத்தல், பூண்டு 4 பல் இவற்றைத் தனித்தனியாக வறுத்து (சிவக்க) எடுத்துக்கொள்ள வேண்டும். 

ஒவ்வொன்றும் வறுபடும் தன்மை வேறானது என்பதால் தனித்தனியாக வறுக்கிறோம். நாலு சின்ன வெங்காயத்தைத் தோல் நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

 இவற்றை அம்மியில் வைத்து நீர் சேர்த்து (அல்லது மிக்ஸியில் போட்டு) நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். ஒரு தேங்காய்ச்சில்லு இப்போதே சேர்த்து அரைக்கலாம். அல்லது தனியாக அரைத்துக் கடைசியில் குழம்பில் சேர்க்கலாம்.

இப்போது ஊறவைத்த புளியைக் கரைத்து குழம்புச்சட்டியில் ஊற்றி, நறுக்கிய காய்களையும் போட்டு அரைத்த மசாலாவையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீரும் உப்பும் சேர்த்து மூடி அடுப்பில் வைத்து வேக விடவேண்டும்.காய்கள் வெந்து விட்டதை அவ்வப்போது திறந்து பார்த்துக்கொள்ள வேண்டும். தக்காளி குழைந்து விட்டதைப் பார்த்தாலே வெந்ததை அறியலாம்.

 இது போகப்போகப் பழகிவிடும். வாசனையை வைத்தே வெந்ததை அறிய காலப்போக்கில் நம் மூக்கும் பழகிவிடும். உப்பு கம்மியாகப் போட்டதைக்கூட வாசனையால் அறிந்து கொள்ள மூக்கு பயிற்சி எடுத்துவிடும்.

பிறகென்ன? சாம்பாருக்குச் சொன்னதுபோல தாளித்து, தாளிதத்தைக் குழம்பில் கொட்டி இறக்கிவிட வேண்டியதுதான். புளிகுழம்பு தயார்.

மசாலாவை தண்ணீர் சேர்க்காமல் நல்லெண்ணெயில் வதக்கி அதோடு நறுக்கிய காய்களையும் போட்டு வதக்கி அப்புறம் புளிக்கரைசலை ஊற்றி உப்பும் தண்ணீரும் சேர்த்து இதே குழம்பை தயாரித்தால் வேறு ருசி வரும்.

இந்த மசாலாவோடு பெருஞ்சீரகம் சேர்த்து அரைத்தால் அது ஒரு ருசி. கசகசா சேர்த்தால் அது ஒரு ருசி. இப்படி இன்னும் ஏதாவது சேர்த்தும் குறைத்தும் புதிய வகைகளை நாம் உருவாக்கலாம்.

No comments:

Post a Comment