Saturday, October 5, 2013

அரிசி - ஏராளமான வகைகள்


DN :Vanisri Sivakumar :5 Oct 2013

தென்னிந்திய உணவில் முக்கிய இடம்பிடிப்பது அரிசி உணவே. அரிசி உணவில் தான் எத்தனை எத்தனை வகைகள். அரிசி உணவில் மட்டும் அல்ல அரிசியிலும் ஏராளமான வகைகள் உள்ளன. அவற்றுக்கு தனித்தனியாக நன்மைகளும் உள்ளன.
பொதுவாக தமிழர்கள் புழுங்கல் மற்றும் பச்சரிசியை மட்டுமே உணவுக்கு பயன்படுத்துவார்கள். அதையும் தாண்டி, பிரியாணிக்கு என பாஸ்மதி அரிசி பயன்படுத்தப்படுகிறது.
இப்போது, ஒவ்வொரு அரிசிக்கும் உள்ள குண நலன்களைப் பற்றி பார்க்கலாம்.
புழுங்கல் அரிசி
தற்போது நாம் சாப்பிடும் புழுங்கல் அரிசி பாலிஷ் செய்வதாகக் கூறி அதில் உள்ள ஏராளமான விட்டமின்களும், சத்துக்களும் நீக்கப்பட்டுவிடுகிறது. அதையும் நாம் சில முறை தண்ணீரில் கழுவி, நன்கு வேக வைத்து கஞ்சியை வடித்துவிட்டு வெறும் சக்கையாக சாப்பிட்டு வருகிறோம். எனவே, பாலிஷ் செய்யப்படாத அரிசியே உடலுக்கு ஏற்ற உணவாக இருக்கும்.
புழுங்கல் அரிசியில் உள்ள நன்மைகள்
புழுங்கல் அரிசி எளிதாக, விரைவாக ஜீரணம் ஆகக் கூடிய தன்மை கொண்ட ஒரு உணவாகும். அரிசி சாதம் முழுமையாக ஜீரணம் ஆக ஒரு மணி நேரம் கூட போதுமானது. பைபர் குறைவாக உள்ள உணவாகவும் புழுங்கல் அரிசி உள்ளது. எளிதாக ஜீரணம் ஆகக் கூடிய உணவு பொருட்களை சாப்பிட வேண்டிய குழந்தைகள், வயதானவர்களுக்கு புழுங்கல் அரிசி சாதம் ஏற்ற உணவாக இருக்கும்.
பச்சரிசி
நெல்லை அவிக்காமல் அதில் இருந்து அரிசியை எடுப்பதே பச்சரிசியாகும். இது அவிக்கப்படாத அரிசி என்பதால், ஜீரணம் ஆக கடினமாகவும், அதிக நேரம் எடுக்கும் உணவாகவும் கருதப்படுகிறது. பச்சரிசி சாப்பிட்டால் உடல் சதைப் பிடிப்பு ஏற்படும் என்று கூறுவார்கள். எனவே, உடல் மெலிந்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம்.
பச்சரிசியின் நன்மைகள்
பச்சரிசியை சாப்பிட்டால் உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகும். உடல் மெலிந்து கொழுப்புச் சத்தே இல்லாமல் பலவீனமாகக் காணப்படுபவர்கள் பச்சரிசி சாதம் சாப்பிடலாம். இதனால் உடலும் பருமனாகும். ஆனால், வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளில் பிரச்னை உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.
சிகப்பரிசி
சிகப்பரிசி உடல் நலனுக்கு மிகவும் ஏற்ற உணவாக உள்ளது. ஆனால், இந்தியாவில் சிகப்பரிசியை பயன்படுத்தி உணவு தயாரிப்பது மிகவும் அரிது. புழுங்கல் அரிசியை விட இது விலை அதிகம் என்பதாலும், இதன் சுவை மற்ற சுவையோடு நன்றாக சேர்வதில்லை என்பதாலும், இதனை உணவில் பயன்படுத்துவது மிக மிகக் குறைவு. ஒரு சில மாநிலங்களில் மட்டும் சிகப்பரிசியை உணவுக்குப் பயன்படுத்துகிறார்கள்.
சிகப்பரிசியின் நன்மைகள்
சிகப்பரிசியில் அதிகமான பைபர் உள்ளது. இதனை சாப்பிடுவதால், ரத்தத்தில் அதிகமான கொழுப்பு சேர்வது தவிர்க்கப்படுகிறது. மேலும், சிகப்பரிசியில் எண்ணெய் தன்மை இருப்பதால் ரத்த அழுத்தம் குறைகிறது. உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்து போதிய அளவுக்குக் கிடைக்கிறது. மேலும், சிகப்பரிசி சாதத்தை சாப்பிட்டால், உணவில் சர்க்கரையின் அளவு சேர்வது மிக தாமதமாக நடைபெறும்.  சிகப்பரிசியில் மேலும் ஏராளமான விட்டமின்களும், சத்துக்களும் உள்ளன. இது இயற்கையிலேயே உடலுக்கு ஏற்ற உணவாகும்.
பாஸ்மதி அரிசி
இந்தியாவில் உற்பத்தியாகும் அரிசியில் பாஸ்மதி அரிசியும் ஒன்று. எவ்வாறு புழுங்கல் அரிசியில் பல்வேறு ரகங்களும், பல்வேறு விலைகளிலும் விற்கப்படுகிறதோ அதுபோலவே, பாஸ்மதி அரிசியிலும் ஏராளமான வகைகள் உள்ளன.  பாஸ்மதி அரிசி வெள்ளை மற்றும் பிரவுன் நிறங்களில் உள்ளன.
மற்ற அனைத்து அரிசி வகைகளையும் விட பாஸ்மதி அரிசியில் நிறைய பைபர் அடங்கியுள்ளது. இதில் பல வகையான உணவு வகைகளை தயாரிக்கலாம். இதன் மற்றொரு சிறப்பு, இந்த அரிசிக்கு என்று தனியாக மணமும், சுவையும் உண்டு. இதில் உடலுக்கு நன்மை பயக்கும் சில வேதி குணங்களும் அடங்கியிருப்பதால், மற்ற ஏனைய அரிசிகளை விட, பாஸ்மதி அரிசி உடலுக்கு பல நன்மைகளை தருகின்றன.

No comments:

Post a Comment