Monday, November 4, 2013

பயறு அடை




தாளிக்கும் மாமி என்ற 'அடை'மொழியுடன்... 
...ஐயோ குஜராத் அக்காவிடம் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சமையல்குறிப்பு ஒன்றை கேட்டிருந்தோம்.

சமையல் குறிப்பை கிண்டல்செய்துகொண்டே குறிப்பு போடுவது என்ன மாதிரியான நேர்மை என்று சண்டைக்கு வந்தார். சமையல்குறிப்பிற்கு எதிரி என்றால் வலைப்பதிவுக்கு "இட்லிவடை" என்று பெயர் வைப்போமா என்று லாஜிக் பேசியவுடன் "அதெல்லாம் எழுதும் வழக்கமே விட்டுப்போய்விட்டது" என்று நழுவிவிட்டார். 

விடுவோமா ? ... 

நேற்று இரவு தன் ஃபேஸ்புக் பக்கத்தில் காலையில் தான் செய்த ரெசிபி கலக்கல் என்று சொல்லி வாண்ட்டடாய் வண்டியில் ஏறியவரிடம் அதையே எழுதிக்கொடுக்கச் சொன்னோம். மறுக்க வழியில்லாததால் படம் எடுக்கவில்லையே என்று பம்மினார். பரவாயில்லை என்று சொல்லி குறிப்பை மட்டும் எப்படியோ வாங்கிவிட்டோம். 

பத்து நிமிஷம் இருங்க என்றார். சரி 'அரசியல்' ஃபேஸ்புக்கில் மோடி ஸ்டேட்டஸ் அல்லது டிவட்டரில் விட்ட சண்டையை தொடர போகிறார் என்று நினைத்த எங்களுக்கு பெரும் வியப்பு. 'அடை' மாவு தீர்ந்துவிட்டது ( நம்பிவிட்டோம் ) ஆனால் அடை செய்வதற்கு தேவையான சரக்குகளை ஃபோட்டோ எடுத்து அனுப்பிவிட்டார்.  
'சரக்கு மாஸ்டர்' படத்தைவிட நன்றாக இருப்பதால் இங்கே அதை பதிவு செய்கிறேன். 

பயறு அடை

தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி (இட்லி அரிசி) -- 1 கப்
கொத்துக்கடலை - 1/4 கப்
முழுத்துவரை (தோலுடன்) - 1/4 கப்
கருப்பு உளுத்தம்பருப்பு - 1/4 கப்
பச்சைப் பயறு - 1/4 கப்
கொள்ளு - 1 டேபிள்டீஸ்பூன்
கேப்பை - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 3
இஞ்சி - பெரிய துண்டு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம்
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
தேங்காய் எண்ணெய், நெய் (கலவை)

செய்முறை:
பயறு வகைகள், கொள்ளு, கேப்பையை நீரில் கழுவி 6 முதல் 8 மணிநேரம் ஊறவைக்கவும். தனியாக அரிசியைக் களைந்து 4 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும். 

பயறு வகைகள் ஊறவைத்த தண்ணீரை முற்றிலும் வடித்து மேலும் ஒன்றிரண்டு முறை அலசி நீரை வடிக்கவும். அரிசி ஊறவைத்த நீரை அரைக்கப் பயன்படுத்தலாம்.

அரிசி, பயறுகளுடன் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி, பெருங்காயம், உப்பு சேர்த்து மிக்ஸி அல்லது கிரைண்டரில் அதிகம் நீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். 

கறிவேப்பில்லை, கொத்தமல்லித் தழைகளைப் பொடியாக அரிந்து சேர்க்கவும்.

சிறிது நெய்யை லேசாக உருக்கி, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து வைத்துக்கொள்ளவும்.

மாவை காய்ந்த கல்லில் மெல்லிய அடைகளாகத் தட்டி, அங்கங்கே துளையிட்டு, எண்ணெய் ஊற்றி நிதானமான தீயில் இருபுறமும் சிவக்க எடுக்கவும். 

மிகவும் சுவையான கரகரப்பான அடை. ( அப்படியா ? ) 

பின்குறிப்பு (கொஞ்சம் டெக்னிக்கல்):
பருப்புகளைக் குறைத்து தோலுடன் கூடிய பயறுகளை உபயோகித்துச் செய்யவேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்து பார்த்தேன். என்றாலும் நிறத்தைப் பார்த்து, சுவை எப்படியிருக்கோமா, பாதிக்குப் பாதி பருப்பும் கலந்திருக்கலாமோ என்று தயக்கமாக இருந்தது. ஆனால் வீட்டில் பெரும் வரவேற்பைப் பெற்று இனி எப்பொழுதுமே அடை என்றால் இப்படித்தான் என்று சாப்பாட்டு மேஜையில் முடிவெடுக்கப் பட்டது. :) ( இதற்கு பெயர் தான் கூட்டணி தர்மம் ) 

- ஜெயஸ்ரீ
http://mykitchenpitch.wordpress.com/

No comments:

Post a Comment