அனைவருக்குமான வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது. 

அதை தேடிப்பிடிப்பதுதான் சவாலானது. முதலில் உங்கள் திறமையையும் ஆளுமையையும் பிரதிபலிக்கக்கூடிய, உங்களுக்கு வேலை வாங்கித் தரக்கூடிய ரெஸ்யூமை தயார் செய்யுங்கள்!

இப்போது எந்தெந்த நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற குழப்பம் இருக்கும். நீங்கள் படித்த கல்லூரியில் ஹெச்.ஆர் துறையின் துறைத்தலைவரைச் சந்தித்து, கடந்த மூன்று ஆண்டுகளில் உங்கள் கல்லூரிக்கு எந்தெந்த நிறுவனங்களில் இருந்து வளாகத் தேர்வுக்கு வந்தார்கள் என்ற தகவலை கேட்டுப் பெறுங்கள். அவர்கள் தரும் பட்டியலில் உள்ள நிறுவனங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரியுங்கள்.
இப்போதெல்லாம் அனைத்து நிறுவனங்களுக்கும் தனி வெப்சைட் உண்டு. அதற்குள் சென்று நிறுவன தகவல்களைச் சேகரித்து, அங்கு உங்களுக்கான வாய்ப்புகள் பற்றி அறியலாம். அதிலேயே அந்த நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரியும் அலுவலக முகவரியும் கொடுக்கப்பட்டிருக்கும். 

இல்லையெனில் ‘தொடர்புக்கு’ என்ற பகுதியில் கிளிக் செய்து அந்த நிறுவனத்தில் தொடர்பு எண்ணைப் பெற்று, அதன் மூலம் சரியான முகவரியை வாங்கலாம்.

நீங்கள் விண்ணப்பிக்கிற நிறுவனத்தின் மின்னஞ்சலுக்கு உங்கள் ரெஸ்யூம், இணைப்பு கடிதம், நீங்கள் படிக்கிற காலத்தில் வாங்கியிருக்கும் சாதனை சான்றிதழ்கள் போன்றவற்றை மெயில் அனுப்பலாம். இல்லையெனில் பிரின்ட் எடுத்து வைத்திருக்கும் கடிதத்தை அலுவலக முகவரிக்கு அனுப்பலாம். நீங்கள் விண்ணப்பிக்கிற நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களும் இருக்கும். அவற்றுக்கும் உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிவையுங்கள்.

விண்ணப்பித்ததோடு நம் கடமை முடிந்துவிட்டது என்று இருந்துவிடாதீர்கள். நீங்கள் விண்ணப்பித்த நிறுவனங்களில் நேர்முகத்தேர்வு எப்படி நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள முயற்சி எடுங்கள். ஏற்கெனவே வளாகத் தேர்வுகள் மூலம் வேலைக்குத் தேர்வாகியிருக்கும் உங்கள் நண்பர்களிடம் நேர்முகத்தேர்வு பற்றி கலந்து ஆலோசியுங்கள்.

நீங்கள் சார்ந்த துறை குறித்த அடிப்படை தகவல்களுடன் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்த தகவல்களையும் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். இதை இப்படி செய்யலாமே, அதை அப்படி கையாளலாமே என்று உங்கள் துறை குறித்து நீங்கள் யோசித்து வைத்திருக்கும் உங்கள் முயற்சி குறித்த தெளிவான கண்ணோட்டத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அப்போதுதான் நேர்முகத்தேர்வில் திணறாமல் இருக்க முடியும். இனி உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வரலாம்.. அதனால் அதற்கு ஏற்ப உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் நேர்முகத்தேர்வுக்குச் செல்லும் முன் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை இப்போது பார்ப்போம். ஆள்பாதி ஆடை பாதி என்பார்கள். அதற்கேற்ப உங்களை சரிபடுத்திக் கொள்ளுங்கள். சுத்தம் சோறு மட்டும் போடாது, வேலையும் வாங்கித் தரும். அதனால் தலைமுடியை திருத்தி, நகங்களை ஒழுங்காக வெட்டி பளிச்சென்று இருங்கள். எப்போதும் எண்ணெய் வழிந்த முகத்தோடு இல்லாமல் முகப்பொலிவுடன் இருக்கப் பாருங்கள். சரியான உறக்கமே பாதி உற்சாகத்தைக் கொடுக்கும். அதிக நேரம் தூங்குவது, குறைவான நேரம் தூங்குவது இரண்டுமே தவறு. ஒரு நாளுக்குக் குறைந்தது 7 முதல் 8 மணிநேரம் வரை உறங்கலாம். பகல் தூக்கத்தை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

இப்போது உடைக்கு வருவோம். நேர்முகத் தேர்வுக்குச் செல்கிற நிறுவனத்துக்குத் தகுந்தாற்போல உடையணிந்து செல்வது நல்லது. பளிச்சென்று இருக்க வேண்டும் என்பதற்காகக் கண்ணை உறுத்தும் நிறங்களைத் தேர்ந்தெடுக்காதீர்கள். எந்த உடையாக இருந்தாலும் உங்கள் அளவுக்குச் சரியானதாக இருக்கட்டும். மிகத் தளர்வான ஆடைகளும், உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளும் நேர்முகத் தேர்வுக்கு உகந்தவை அல்ல. நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆடை இந்திய உடையா, மேற்கத்திய உடையா என்பதைத் தாண்டி, அது உங்களுக்கு தன்னம்பிக்கை தருவதாக இருக்க வேண்டும். பொருந்தாத உடையை அணிந்துகொண்டு சங்கடத்தில் நெளிவதைத் தவிர்க்க வேண்டும். பிறரை உறுத்தாத சரியான ஆடையே உங்கள் உடல் மொழியின் பாதி வேலையைச் செய்து முடித்துவிடும்.

தேர்வு அதிகாரிகள் முன்னிலையில் ஆடையைச் சரிசெய்வது, தலைமுடியைக் கோதிவிடுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். நம் கவனம் ஆடை சரிசெய்வதில் இருக்கும்போது, அங்கே கேட்கப்படும் கேள்வியை முழுமையாக உள்வாங்கி பதில் சொல்ல முடியாமல் போய்விடும். கொலுசு அணிவதைத் தவிர்த்துவிடுங்கள். நகங்களில் பாதி உதிர்ந்து போன நகப்பூச்சுடனோ, நிறம் மங்கிய மருதாணியுடனோ செல்லாதீர்கள்.

நெற்றியில் சின்னதாக ஒற்றைப் பொட்டு போதும். விபூதி, குங்குமம், செந்தூரம் என அடுக்கடுக்காக பொட்டுக்கள் வைத்துச் செல்ல வேண்டாம்.

நீங்கள் அணிந்து செல்கிற காலணி உங்களுக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும். அதை அணிந்துகொண்டு உங்களால் இயல்பாக நடக்க முடிகிறதா என்று பரிசோதித்துப் பார்த்துக்கொள்ளுங்கள். மற்றவர்கள் அணிகிறார்களே என்று உங்களுக்குப் பழக்கமில்லாத பாயின்ட் ஹீல்ஸ் வகையறாக்களை முயற்சிக்க வேண்டாம்.

ஆண்களுக்கும் இது பொருந்தும். உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக உங்கள் முகத்துக்குக் கொஞ்சமும் பொருத்தம் இல்லாத ஃபிரெஞ்ச் பியர்டு, நீண்ட கிருதா இவற்றை முயற்சி செய்யாதீர்கள். உங்களை அறிவாளித்தனமாகக் காட்டும் என்பதற்காக நீங்கள் செய்கிற மீசை அழகே, உங்களை அப்படி முன்னிறுத்தாமலும் போய்விடலாம், கவனம்.

அதேபோல கட்டம்போட்ட சட்டை, பல வண்ணங்கள் கொண்ட சட்டை இவற்றைத் தவிர்த்துவிட வேண்டும். சற்றே பருமனாக இருப்பவர்கள் பிளெயின் சட்டை அல்லது மெல்லிய கோடுகள் கொண்ட சட்டை அணிவது நலம். மெல்லிய உடல்வாகு கொண்டவர்கள் சற்றே பெரிய கோடுகள் கொண்ட சட்டை அணியலாம். உடைக்கு ஏற்ற டை, ஷூ அணியுங்கள், அது உங்களைப் பொறுப்பான மனிதனாகக் காட்டும். நேர்த்தியாக இஸ்திரி செய்யப்பட்ட கைக்குட்டையை உபயோகியுங்கள். கசங்கி, சுருட்டி பாண்ட் பைக்குள் திணிக்கப்படும் கைக்குட்டை உங்களது டென்ஷனைக் காட்டிக்கொடுத்துவிடும்.
செக்கில் தலையை விட்ட மாதிரி எண்ணெய் வைத்துச் செல்வதும் எண்ணெய் வைக்காமல் பரட்டைத் தலையுடன் செல்வதும் கூடாது. மிக லேசாக எண்ணெய் வைத்து, தலைமுடி காற்றில் பறக்காத வண்ணம் தலை வார வேண்டும். அருகில் இருப்பவர்களை மயக்கமடையை வைக்கிற பாடி ஸ்பிரேக்களைத் தவிர்த்துவிடுங்கள். யாருக்கும் உறுத்தாத மைல்ட் ஃபிளேவரில் உள்ள ஸ்பிரேவைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள். எல்லாவற்றையும் முதல் நாளே எடுத்து வைத்துவிட்டு உறங்கச் செல்லுங்கள். 
அப்போதுதான் காலையில் டென்ஷன் இல்லாமல் நேர்முகத் தேர்வுக்குக் கிளம்ப முடியும்.

 வாழ்த்துகள்!