Saturday, September 21, 2013

சாதனை பெண்கள் : ஜெயித்துக் காட்டிய ஜெயலட்சுமி டீச்சர்

குழந்தைகளுடன் ஜெயலட்சுமி டீச்சர்
குழந்தைகளுடன் ஜெயலட்சுமி டீச்சர் 

  தி இந்து’ :கரு. முத்து :சனி, செப்டம்பர் 21, 2013

பிள்ளைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைப்பதையே கவுரவ
 குறைச்சலாக நினைக்கும் இந்தக் காலத்தில், அரசு பள்ளிக்கும் 
ஒரு கவுரவத்தைக் கொடுத்திருக்கிறார் ஜெயலட்சுமி டீச்சர்.

நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ளது பழையார். 
இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளைகூட இந்த ஆண்டு 
தனியார் பள்ளிக்கு பைக்கட்டு தூக்கவில்லை. பள்ளிக்குப் 
போக வேண்டிய அத்தனை பிள்ளைகளும் இங்குள்ள 
அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஆனந்தமாய் போய்க்
 கொண்டிருக்கிறார்கள்.

 காரணம், ஒன்றாம் வகுப்பில் பாடம் சொல்லித்தரும் 
ஜெயலட்சுமி டீச்சர்.

''மிகப்பெரிய மீனவ கிராமமான இந்த பழையாரில் மக்களுக்கு
 படிப்பு மேல் ஆர்வமே கிடையாது. ஆணும் பெண்ணும் கடலுக்கு 
போயிருவாங்க. கடலுக்கு போக ஆளு வேணுமேங்கிறதுக்காக
 நிறைய புள்ளைங்கள பெத்துக்குவாங்க. ஆனா, படிக்க 
வைக்கமாட்டாங்க. பிழைப்புத்தான் அவர்களுக்கு பிரதானம்.
 படிப்பு ரெண்டாம்பட்சம்தான். போன வருஷம் வரைக்கும் 
இதுதான் நிலைமை. 

ஆனா, இந்த வருஷம் ஒன்றாம் வகுப்பில் 
சாரை சாரையாய் பிள்ளைகளைக் கொண்டுவந்து
 சேர்த்தி ருக்கிறார்கள். காரணம் படிப்பு மீது அவர்களுக்கு
 வந்திருக்கும் ஆர்வம். அதற்கு காரணம் 
எங்க ஜெயா டீச்சர்” பெருமிதத்துடன் சொல்கிகிறார் 
பள்ளித் தலைமையாசிரியர் மஞ்சுளா.

அப்படி என்ன சாதித்துவிட்டார் இந்த ஜெயலட்சுமி டீச்சர்? 
அவரிடமே கேட்கலாம்..

''புள்ளைங்கள பள்ளிக்கு அனுப்புறதுல இங்குள்ள
 மக்களுக்கு விருப்பமில்லைன்னு தெரிஞ்சுது. 
அந்த மனப்பான்மையை உடைக்கணும்னு நெனச்சேன். 
அதுக்காக மீனவ மக்களை முடிஞ்சவரைக்கும் சந்திச்சுப் பேசி,
 கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி புரிய வச்சேன்
. அப்படி போற நேரங்கள்ல அவங்க வீட்டு சின்னப்
 புள்ளைங்ககிட்ட பரிவு காட்டிப் பேசுவேன். புள்ளைங்களுக்கு
 என்னை ரொம்ப புடிச்சுப் போச்சு. டீச்சர்.. டீச்சர்னு சுத்த 
ஆரம்பிச்சிட்டாங்க. அப்படியே அவங்கள பள்ளிக்கூடத்துக்கு 
இழுத்து வந்துட்டேன். பெத்தவங்களும் சந்தோஷமா வந்து
 அட்மிஷன் போட்டுட்டு போனாங்க.

ஆசிரியர்னா கையில பிரம்பு வைச்சிருப்பாங்க; சேட்டை 
பண்ணுனா வலிக்க புடைக்க அடிப்பாங்கன்ற நினைப்பை 
முதலில் தவிடுபொடி ஆக்கினேன். குழந்தைங்களோட 
உக்காந்து பேசி, அவங்களோட சின்னச் சின்ன ஆசைகளுக்கு
எல்லாம் காதுகுடுத்து அவங்களுக்கு என் மீது நம்பிக்கை வர 
வச்சேன். இதெல்லாம் அவங்களுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு.
 ஆசிரியர்தான் பிள்ளைங்கள அடிப்பார்னு கேள்விப்பட்டுருப்பீங்க. 
என்னோட பிள்ளைங்க, ‘போங்க டீச்சர்’னு எத்தன தடவ
 என்னை செல்லமா முதுகுல தட்டிட்டு போயிருக்குங்க தெரியுமா?
பள்ளிக்கூடத்துல பாடம் படிக்கிறோம்கிற பயம் இல்லாத 
வகையில அந்தப் புள்ளைங்களுக்கு அத்தனையையும்
 கற்றுக் கொடுத்திருக்கிறேன். பிள்ளைங்களை ’போங்க
 வாங்க’ன்னு மரியாதையாத்தான் அழைப்பேன். எதுவா
 இருந்தாலும் எங்கிட்ட பகிர்ந்துக்கிற பக்குவத்தை பிள்ளைங்களுக்
கு வளர்த்திருக்கேன். 

என் அன்பையும் அரவணைப்பையும் புரிஞ்சுக்கிட்டதால
 இந்தப் புள்ளைங்க ஒருநாள்கூட பள்ளிக்கு வராம இருந்ததில்லை
. அவங்களோட நடத்தை மாற்றத்தையும் ஒழுக்கத்தையும்
 தெரிஞ்சுக்கிட்ட பெற்றோர்கள் பிள்ளைங்கள ஒருநாள் கூட 
வீட்டுல வைச்சுக்காம பள்ளிக்கு அனுப்பிவைச்சிடுறாங்க.

இன்னொரு முக்கியமான விஷயம், சுகாதார மாற்றம்.
 குளிக்காம, தலைசீவாம அப்படியே வந்துக்கிட்டிருந்த 
பிள்ளைகளுக்கு சுத்தமும் சுகாதாரமும் எவ்வளவு 
முக்கியம்னு அக்கறையோடு எடுத்துச் சொன்னேன். 
அதையும் புரிஞ்சிக்கிட்டு அழகா ஆரோக்கியமா மாறிட்டாங்க’’
வெற்றியின் ரகசியத்தை வெளிப்படையாய்
 சொன்னார் ஜெயலட்சுமி டீச்சர்.

ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவர்கள் குறைந்தது நாற்பது 
ஆங்கில ரைம்ஸ்களை ஆட்டம் பாட்டத்துடன் ஒப்பிக்கிறார்கள். 
முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் பாடல்களை உற்சாகத்துடன் 
பாடுகிறார்கள். ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் போடும் உத்தரவுகளை 
அழகாய் புரிந்து கொள்கிறார்கள். ஐம்பதிலிருந்து நூறு ஆங்கில 
வார்த்தைகளுக்கு அழகுத் தமிழில் அர்த்தம் சொல்கிறார்கள். 
இவை எல்லாவற்றையும்விட, நாள் முழுவதும் உற்சாகம் குறையாமல் 
இருக்கிறார்கள். இவை எல்லாம் ஜெயலட்சுமி டீச்சரால்
 இந்தப் பள்ளி கண்ட பலன்கள்.

'’தனியார் பள்ளி மாணவர்களுக்கு சற்றும் சளைக்கமாட்டார்கள் 
என் மாணவர்கள். அவர்களைவிட கூடுதலாகவே இவர்களுக்கு
 கல்வி அறிவு இருக்கும்’’ என்று சொல்லும் ஜெயலட்சுமி டீச்சர்,
 எல்லா பாடங்களையும் செயல்முறையோடுதான் நடத்துகிறார். 

செயல்வழிக் கற்றலில் இன்று என்னென்ன தொழில்நுட்பங்கள் 
வந்திருக்கிறதோ அத்தனையையும் வாங்கிப் பார்த்து அதில்
 இருப்பவற்றை உடனே வகுப்பறையில் செயல்படுத்திவிடுகிறார்.
இவர் பாடம் நடத்தும் முறையைப் பார்த்து வியந்த முதன்மை 
கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் 
ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆசிரியர்கள் அதை வீடியோ 
படமாக்கி மாவட்டம் முழுவதுமுள்ள தலைமை ஆசிரியர்களுக்
கு போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

 ஆர்வமுள்ள
 ஆசிரியர்கள் பள்ளிக்கே வந்து ஜெயலட்சுமியின் வகுப்பறை
 உத்திகளை கவனித்துக் கொண்டு போய் தங்கள் வகுப்பறையில் 
செயல்படுத்தி இருக்கிறார்கள்.

இப்படி, மாவட்டத்திலேயே முன்னுதாரண ஆசிரியராக
 இருக்கும் ஜெயலட்சுமி டீச்சருக்கு சொந்த ஊர் நாகப்பட்டினம். 
அங்கிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள பழையாரில் தங்கியிருந்து
 சாதனையை தொடர்கிறார்.

தங்கள் பிள்ளைகள் கட்டுச் செட்டாய் பாடம் படிக்கும் அழகை 
பழையார் கிராமத்து மக்கள் தினம் தினம் வந்து பார்த்து
 ரசித்துவிட்டுப் போகிறார்கள். ''படிச்சு என்ன பண்ணப்போவுதுங்க, 
பாடு பார்க்கிற வயசு வர வரைக்கும் இருந்துட்டு அப்புறம்
 பாடுக்கு போவட்டும்னுதான் நெனைச்சிருந்தோம். 
ஆனா இப்ப, எங்கவூட்டு புள்ளைங்க அழகா துணி மணி
 உடுத்துறதும் தஸ்ஸு புஸ்ஸுன்னு இங்கிலீஸ்ல பேசுறதும்
 ரொம்ப அழகா இருக்கு. புள்ளைங்கள படிக்க வைக்கணும்கிற
 ஆசை எங்களுக்கும் பள்ளிக்குப் போகணும்கிற ஆர்வம் 
அதுகளுக்கும் இப்பத்தான் வந்திருக்கு” என்கிறார் 
பழையாரைச் சேர்ந்த அமிர்தவள்ளி.

படம் எடுப்பதற்காக ஜெயலட்சுமி டீச்சரை தனியாக அழைத்தால்,
 அவரை விடாமல் கையை பிடித்துக் கொண்டு கூடவே
 சங்கிலித் தொடராய் வருகிறார்கள் அந்தக் குழந்தைகள். 

தள்ளிப் போகச் சொன்னால் டீச்சரிடம் செல்லமாய் கோபிக்கிறார்கள். 
அவர் சமாதானம் சொன்னதும், ஓடிவந்து முகம் தடவி
 தலை கலைக்கிறார்கள் அந்தப் பிஞ்சு மக்கள். 

திடீரென டீச்சரை சுற்றி நின்று ஆட்டம் ஆடுகிறார்கள். 

அங்கிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் தாயின் கருவில் 
இருக்கும் தலைச்சன் பிள்ளையைப் போல் நிம்மதியாய்
 இருக்கிறார்கள் அந்தக் குழந்தைகள்.

No comments:

Post a Comment