சைபர்சிம்மன்  ;தி இந்து; 25 நவம்பர் 2013

இந்தியப் பெண்களை இன்னும் அதிக எண்ணிக்கையில் இணையத்தை பயன்படுத்த வைப்பதற்காக 'கூகுள் இந்தியா' தனி இணையதளத்தை அமைத்துள்ளது.

இந்த இணையதளம் மூலமாக, பெண்கள் மத்தியில் இணையப் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அடுத்த 5 ஆண்டுக்குள் இணையத்தை பயன்படுத்தும் இந்தியப் பெண்கள் எண்ணிக்கையை 5 கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதுபோல இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியா இரண்டாவது இடத்திற்கு வரவுள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 20 கோடியே 50 லட்சமாக இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜூனில் இந்த எண்ணிக்கை 24 கோடியே 30 லட்சத்தைத் தொட்டுவிடும் என்று இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்க ஆய்வு தெரிவிக்கிறது. இதன் மூலம் இந்தியா அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடிக்கும். தற்போது சீனா 30 கோடி பயனாளிகளோடு முதல் இடத்திலும், அமெரிக்கா 20 கோடியே 70 லட்சம் பயனாளிகளோடு இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இந்தியாவில் இணையப் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவந்தாலும், இணையத்தை பயன்படுத்தும் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இணைய பயனாளிகளில் மூன்றில் ஒருவரே பெண்களாக இருக்கின்றனர்.

இந்த நிலையை, 'கூகுள் இந்தியா' இந்தியாவில் மேலும் அதிக எண்ணிக்கையில் பெண்கள் இணையத்தை பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வு இணையதளத்தை அமைத்துள்ளது. இன்டெல், ஹிந்துஸ்தான் லீவர் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து கூகுள் இந்த இணையதளத்தை அமைத்துள்ளது.

hwgo.com (ஹெல்பிங் வுமன் கெட் ஆன்லைன்) எனும் முகவரியில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளம், இணைய பயன்பாட்டின் அடிப்படைப் பற்றி பெண்களுக்கு வழி காட்டுகிறது. இணையத்தை எளிதாக அறிமுகம் செய்யும் வகையில் இணையத்தை பயன்படுத்த தேவையான அடிப்படையான விஷயங்களை முகப்பு பக்கத்திலேயே கொடுத்துள்ளது.

கம்ப்யூட்டர் அடிப்படையில் துவங்கி, இணைய அடிப்படை, இமெயில், வீடியோ சேவை ஆகியவற்றை எளிமையாக இந்த பகுதி விளக்குகிறது. இணையத்தில் பெண்களுக்கு பயன்படக்கூடிய விஷயங்களையும் வீடியோ விளக்கத்துடன் அளித்துள்ளது.

இணையத்தை பெண்கள் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என வழிகாட்டும் இந்தத் தளத்தில், இணையத்தை பயன்படுத்தி பயன்பெற்ற பெண்களின் அனுபவமும் கொடுக்கப்பட்டுள்ளது.
இணையப் பயன்பாடு என்பது சகஜமாக கருதப்பட்டாலும்கூட, இதுவரை இணையத்தை பயன்படுத்தியிராத பெண்களை இணையம் அருகே கொண்டு வரும் முயற்சியாக இந்தத் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தளம் மூலம் இணையத்தை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கையை 5 கோடியாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கூகுளின் சமூக நோக்கிலான முயற்சிகளில் இதுவும் ஒன்று. இது தற்போது ஆங்கிலத்திலும் இந்தியிலும் உள்ளது. தமிழ் உள்ளிட்ட மற்ற இந்திய மொழிகளிலும் அமைந்தால் நன்றாக இருக்கும்.

இணையதள முகவரி: http://hwgo.com